
வரலாற்று சிறப்புமிக்க இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்ற நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித் ரன் அவுட் ஆகியும் பைல்ஸ் சரியாக விழவில்லை என்று கூறி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான தீர்ப்பை நடுவர் வழங்கி விட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 395 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. ஐந்தாவது நாள் தொடக்கத்தில் 135 ரன்கள் விக்கெட் ஏதுமின்றி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. டேவிட் வார்னர் 60 ரன்களிலும், உஸ்மான் கவஜா 72 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மார்னஸ் லபுஷாக்னே 13 ரன்களில் வெளியேறினார்.