SA vs IND: முதல் டெஸ்டில் ரஹானே நிச்சயம் விளையாடுவார் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணி துணைக்கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களில் 6 முறை இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஒருமுறை மட்டுமே டிரா செய்துள்ளதால் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற மோசமான சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை முதல் தடவையாக தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3ஆவது வீரராக புஜாராவும், 4ஆவது வீரராக விராட் கோலியும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் களமிறங்குவார். இதன் காரணமாக மிடில் ஆர்டரில் உள்ள ஒரு காலியிடத்திற்கு அனுபவ வீரர் ரஹானே விளையாடுவாரா ? அல்லது ஸ்ரேயாஸ் அல்லது விகாரி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியின் துணை கேப்டன் ராகுல் இந்த மிடில் ஆர்டர் வீரருக்கான இடம் குறித்து பேசுகையில், “இந்த முடிவு ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் ரஹானே இந்திய அணிக்காக பல சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அயல் நாட்டு மண்ணில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அவருக்கு அவரது ரெக்கார்டுகளே உதாரணம்.
தற்போதும் அவர் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருக்கிறார். எனவே நிச்சயம் ரஹானே முதல் போட்டியில் விளையாடுவார்” என்று ராகுல் உறுதிபடுத்தி உள்ளார்.
அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உள்ளதால் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றும் ராகுல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now