
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. குஜராத் அணி சார்பாக கேப்டன் ஹார்டிக் பாண்டியா 66 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது.
குறிப்பாக முதல் 10 ஓவர்களின் முடிவில் 80 ரன்களை அடித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. இதனால் அவர்கள் எளிதில் அசத்தலான வெற்றியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்த 10 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே லக்னோ அணியால் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக குஜராத் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றியை பெற்று அசத்தியது.