ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்தப் போட்டியிலும் வழக்கமாக இரண்டாவதாக சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். பின்னர் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை குவித்தாலும் அதனை சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மிட்செல் மார்ஷ் இறுதிவரை களத்தில் நின்று 50 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்கள் என 77 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தினார். அவரோடு இணைந்த மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய அணி ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி டி20 சாம்பியனாகவும் முதல்முறை மகுடம் சூடியது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், “இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஒன்று. அதிலும் குறிப்பாக முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை.
எங்களுடைய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று எங்களுக்கு தெரியும். இந்த தொடர் முழுவதுமே சில தனிப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோன்று ஒரு அணியாகவும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
Also Read: T20 World Cup 2021
இந்த தொடர் முழுவதுமே வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோன்று மிச்செல் மார்ஷ் இந்த போட்டியில் இன்னிங்சை துவங்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. ஸ்டாய்னிஸ் அவருடைய பணியை அருமையாக செய்தார். அதேபோன்று காயம் காரணமாக அவதிப்பட்ட வேட் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். மொத்தமாக முழு அணிக்கும் கிடைத்த ஒரு வெற்றியாக இதனை பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now