
அயர்லாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய மெக்கார்தி மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் சேர்க்க, அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன் சேர்த்தது. இதற்கு அடுத்து இந்திய அணி விளையாடும் பொழுது மழை ஆபத்து அதிகம் இருந்தது.
ஐந்து ஓவரின் முடிவில் 27 ரன்கள் இந்திய அணி எடுத்திருக்க வேண்டும் என்கின்ற நிலையில், இந்திய அணி அதைவிட அதிகமான ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பவர் பிளே ஆறாவது ஓவர் முடியும் பொழுது 32 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 45 ரன்கள் எடுத்திருந்தது. இந்த விதிக்கு விக்கெட் விழ விழ ரன் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆறு ஓவர் வரை விக்கெட் விழாத காரணத்தால் இந்திய அணி பலமான முன்னிலை பெற்று இருந்தது.