
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்தது. இதன்பின் முதல் பேட்டிங் முடிவடைந்த போது தொடங்கிய மழை, இரவு 10 மணியாகியும் நின்றபாடில்லை.
மழை நிற்பதற்காக காத்திருந்த நடுவர்கள் இறுதியாக இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிக முக்கிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதற்கு பிசிசிஐ மற்றும ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தான் காரணம் என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று ஆலோசனை கூறிய போதும், ஏசிசி நிர்வாகிகள் ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டது.