
ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் அதுவரை நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியது. அதை பார்த்து கடந்த 2008இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கிய ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத த்ரில்லர் முடிவுகளை கொடுப்பதால் உலக கோப்பைகளை விட தரத்தில் மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது.
அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவாகியுள்ள ஐபிஎல் தொடரின் 2023 – 2027 ஒளிபரப்பு உரிமை 48,390 கோடிகளுக்கு ஏலம் போனது. அதன் காரணமாக என்எப்எல் தொடருக்கு அடுத்தபடியாக ஈபிஎல், என்பிஏ போன்ற இங்கிலாந்து,அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை முந்தி உலகில் அதிக பணத்தை கொடுக்கும் 2ஆவது விளையாட்டு தொடராக ஐபிஎல் சாதனை படைத்துள்ளது.