
வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று (நவம்பர் 06) ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்ல குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் இணை தொடக்காம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த ரஹ்மத் ஷாவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டி பெவிலியனுக்கு திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் செதிகுல்லா அடல் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது நபி ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், குல்பதின் நைப் 22 ரன்களுக்கும், ரஷித் கான் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமற்றமளித்தனர்.