
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய தன்ஸித் ஹசன் 22 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சௌமியா சர்க்காருடன் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடிக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌமியா சர்க்கார் 33 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 22 ரன்களுக்கும், தாவ்ஹித் ஹிரிடோய் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.