
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹமந்தட்டாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் கடந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.