
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜுபைத் அக்பரி - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 137 ரன்களை எட்டியது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஜுபைத் அக்பரி 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் செதிகுல்லாவுடன் இணைந்த கரீம் ஜானத்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செதிகுல்லா அடல் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.