AFG vs ZIM: டி20 கிரிக்கெட்: தொடரைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்து விளையாடியது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதையடுத்து ஜோடி சேர்ந்த உஸ்மான் கானி - கரீன் ஜனத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
Trending
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உஸ்மான் கானி 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கரீம் ஜனத் அரைசதம் கடந்த கையோடு, 53 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய முகமது நபி தனது பங்கிற்கு 4 சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.
இதனைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் டினாஷே கமுன்ஹுகாம்வே சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரியான் பர்ல் 29 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 40 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த வீரர்களும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறியதால் 17.1 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய முகமது நபி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now