
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தமிம் இக்பால் 13 ரன்களுக்கும், லிட்டன் தாஸ் 26 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 12, ஷாகிப் அல் ஹசன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய தஹித் ஹிரிடோய் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப் ரன்களில் ஆட்டமிழக்க, 51 ரன்களில் ஹிரிடோயும் ஆட்டமிழக்க, 43 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக வங்கதேச இன்னிங்ஸ் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.