
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09ஆம் தேதி நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் இருந்தன.
அதன்படி செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் எஞ்சியிருந்த மூன்று நாள் ஆட்டங்களும் நடைபெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்போட்டியின் மூன்றாம் நாள், நான்காம் நாள் ஆட்டங்களும் அடுத்தடுத்து தொடர் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்றைய தினம் இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டமும் தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவு எட்டப்படமல் முழுவதுமாக கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.