
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியிடம் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.
அதன்படி நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களையும், அஹ்மத்துல்லா ஓமர்சாய் 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 40 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.