டி20 உலகக்கோப்பை : ஆஃப்கானிஸ்தான் பங்கேற்பது உறுதி!
நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
Trending
தலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருநது அவசரமாக வெளியேறி வருகின்றனா். மேலும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கனிலிருந்து வெளியேறியதை அடுத்து, போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள்.
இச்சூழலில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ள குரூப் 2 பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
எனினும் நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன் கூறுகையில், “நாங்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிலநாள்களில் எங்கள் வீரர்கள் காபூலில் பயிற்சியை மீண்டும் தொடங்குவார்கள். ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் இணைந்து நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இடத்தைப் பார்த்து வருகிறோம்.
இத்தொடரை நடத்த இலங்கை, மலேசியா நாடுகளிடம் பேசிவருகிறோம். இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்போம். அதேபோல உள்ளூர் டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளோம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நல்ல பயிற்சியாக அது அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now