
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மூன்று போட்டிகளின் முடிவின் அடைப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது புதுபிக்கபட்ட டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் 3 இடங்கள் முன்னேறி 24ஆம் இடத்தையும், மார்க் சாப்மேன் 12 இடங்கள் முன்னேறி 33ஆம் இடத்தையும், பிடித்துள்ளனர். அதேசமயம் நேபாள் அணி வீரர் தீபேந்திர சிங் ஐரி 10 இடங்கள் முன்னேறி 50ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேசமயம் இந்த பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். மேலும் இந்த பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6ஆம் இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு இடம் முன்னேறி 12ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.