
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டர்களால் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கு முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் வீரர்களும் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களையும் சேர்க்க, தென் ஆப்பிரிக்க 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தொடரை சமன்செய்துள்ளது.