கிராமத்தில் குப்பைகளைக் கொட்டி வசமாக சிக்கிய ஜடேஜா!
பக்கத்து கிராமத்தில் குப்பைகளை கொட்டியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கிராம தலைவரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் கட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஜய் ஜடேஜா. இவர் பேட்டிங், பீல்டிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
ஆனால் மேட்ச் பிக்ஸிங் புகாருக்கு பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு வெளியான 'கேல்' என்ற பாலிவுட் படத்தில் சன்னி தியோல் - சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார்.
Trending
பிறகு, 'பல் பல் தில்கே சாத்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த 'கை போ ச்சே' படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக ஒரு சிறு காட்சியில் நடித்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு கோவாவின் அழகிய ஆல்டோனா கிராமத்தில் பங்களா வைத்திருக்கும் அஜய் ஜடேஜாவுக்கு, பக்கத்து கிராமமான நாச்சினோலாவில் குப்பைகளை கொட்டியிருக்கிறார். இதனால், அவருக்கு ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் துருபி பந்தோட்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்கிராம தலைவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் குப்பை பிரச்சனையால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். வெளியில் இருந்தும் குப்பைகள் கிராமத்தில் கொட்டப்படுகின்றன. எனவே குப்பைப் பைகளை சேகரித்து குப்பை கொட்டுபவர்களை அடையாளம் காண சில இளைஞர்களை நியமித்தோம். அப்போது, அஜய் ஜடேஜா என்ற பெயரில் சில பைகளில் குப்பைகளை நாங்கள் கண்டுபிடித்தோம்.
இதையடுத்து, நேரடியாக அவரிடம் சென்று, 'எதிர்காலத்தில் குப்பைகளை கிராமத்தில் கொட்ட வேண்டாம்' என்று நாங்கள் அவருக்கு கூறிய போது, அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார். பிறகு ரூ. 5,000 அபராதத்தை அவர் செலுத்தினார். அத்தகைய பிரபலமான கிரிக்கெட் வீரர் எங்கள் கிராமத்தில் தங்கியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தவர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now