
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரஹானே. அடுத்த டெஸ்ட் கேப்டன் என்ற வரிசையில் இருந்த ரஹானே திடீரென்று ஃபார்ம் அவுட் காரணமாக இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் நடப்பாண்டுக்கான ஓய்வு ஊதிய பட்டியலில் இருந்தும் ரஹானே நீக்கப்பட்டார். மேலும் ரஹானே 18 மாதம் காலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் ரஹானேவை எடுக்க மற்ற அணிகள் தயக்கம் காட்டியது.
ஆனால், தோனி மட்டும் ரஹானேவை எடுத்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி வைத்த நம்பிக்கையை ரகானே இரு மடங்கு காப்பாற்றினார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரகானே 326 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 172 ரன்கள் ஆகும். ரஹானே பங்களிப்பால் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.
இதனை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி ஆட்டத்திற்கு ரஹானேவை தேர்வுக்குழுவினர் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்த ரஹானே அபாரமாக விளையாடி 89 ரன்களை முதல் இன்னிங்ஸ் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.