
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் குளோசெஸ்டர்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்டோலில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குளோசெஸ்டர்ஷைர் அணியானது ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஹம்மண்ட் 19 ரன்களிலும், பான்கிராஃப்ட் 36 ரன்களிலும், ஜோ பிலிப்ஸ் 10 ரன்க்களிலும், ஜேம்ஸ் பரேசி 18 ரன்களிலும், கேப்டன் ஜேக் டைலர் 8 ரன்களிலும், சார்லஸ்வொர்த் 21 ரன்களிலும், கர்டிஸ் காம்பெர் 21 ரன்களையும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் ஸ்மித் 27 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் குளோசெஸ்டர்ஷைர் அணியானது 36 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, குளோசெஸ்டர்ஷைர் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்க்ரீவன் 3 விக்கெட்டுகளையும், அலெக்ஸ் க்ரீன் மற்றும் ட்ரெவாஸ்கிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.