
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
மேற்கொண்டு இத்தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடிவருகின்றன. அதேசமயம் சில அணிகள் தங்களுக்குள்ளாகவே பயிற்சியில் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.