IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டு ஆடிவருகிறது இந்தியா.
முதலிரண்டு டி20 போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த், வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Trending
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல்2 போட்டிகளில் சரியாக ஆடாத ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 57 ரன்கள் அடித்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷனும் ஷ்ரேயாஸ் ஐயரும் களத்தில் நின்றபோது 12 ஓவரில் 120 ரன்களை குவித்தது இந்திய அணி. 13வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், அதே ஓவரில் ஷம்ஸியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, அரைசதம் அடித்த இஷான் கிஷனும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் ரன்வேகம் குறைந்தது.
தட்டுத்தடுமாறிய கேப்டன் ரிஷப் பந்த் 8 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 4 பவுண்டரிகளை விளாசி 31 ரன்கள் அடித்து ஓரளவிற்கு நன்றாக முடித்து கொடுத்தார். இதனால் 20 ஓவரில் இந்திய அணியால் 179 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா 8 ரன்னிலும், ரீஸா ஹெண்டரிக்ஸ் 23, டுவைன் பிரிட்டோரியஸ் 20 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வெண்டர் டூசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் என மேட்ச் வின்னர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய டெய்ல் எண்டர்களும் இந்திய அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
இதனால் 19.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரில் உயிர்ப்புடன் உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now