
இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் செட்டேஸ்வர் புஜரா, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் லன்க்ஷைர் அணிக்காக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தொடங்கியுள்ளார்.
3 வகையான இந்திய அணியிலும் விளையாடியுள்ள இவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது துரதிஷ்டவசமாக காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். 17 வயதில் 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் கடந்த 4 வருடங்களில் இதேபோல் காயங்களால் நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அந்த நிலைமையில் மீண்டும் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் இம்முறை இந்திய அணிக்கு திரும்புவதற்காக நேராக இங்கிலாந்துக்கு பறந்து லன்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்த நிலைமையில் ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக அறிமுகமான அவர் தனது புதிய அணியின் தொப்பியை பெற்று களமிறங்கினார். அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நார்த்தம்டன்ஷைர் தனது முதல் இன்னிங்சில் லன்கக்ஷைர் அணியின் நல்ல பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக பந்துவீசிய வாசிங்டன் சுந்தர் சுழலுக்கு சவாலான நார்த்தம்டன் மைதானத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி அதிகபட்ச ரன்கள் எடுத்த லீவிஸ் மெக்மனஸ் 61 ரன்களிலும் ராப் கேயோக் 54 ரன்களிலும் அவுட் செய்து பெரிய ரன்களை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்.