ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2010 முதல் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி மூன்று முறை கோப்பைகளை வென்றிருக்கிறார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். சிஎஸ்கே அணியுடன் பயணித்து 6 சீசன்களில் 3 முறை கோப்பைகளை வென்றிருக்கிறார்.
நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் பைனலுக்கு முன்பு, “204 போட்டிகள், 11 பிளே-ஆப் மற்றும் 5 கோப்பைகள் வென்றிருக்கின்றேன். பைனல் தான் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்று பதிவிட்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்தது. 5ஆவது முறையாக சிஎஸ்கே கோப்பையை வென்றது. ராயுடுவிற்கு இது 6ஆவது கோப்பையாகும். சிஎஸ்கே அணிக்காக தோனி கோப்பையை பெறும்போது, ராயுடுவை அழைத்து பெறவைத்தார். நெகிழ்வான பல சம்பவங்கள் பைனல் முடிந்த பிறகு நடந்தது. இந்நிலையில் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு முடிவை மாற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் பிரிவு பெறுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.