யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சார்ஜர்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் - டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் காம்ரன் அக்ரம் 15 ரன்களிலும், திலகரத்னே தில்சன் 11 ரன்களுக்கும், லெவி 11 ரன்களுக்கும், கார்டர் ரன்கள் ஏதுமின்றியும், ஷாஹித் அஃப்ரிடி 18 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
அதன்பின் இணைந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் - அப்துல் ரஸாக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக செயல்பட்ட அப்துல் ரஸாக் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 35 ரன்களை குவித்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணியில் முகமது ஹபீஸ் ரன்கள் ஏதுமின்றியும், முக்தார் அஹ்மத் 5 ரன்களுக்கும், உபுல் தரங்கா 5 ரன்களுக்கும், பென் டக் 16 ரன்களுக்கும், டேரன் ஸ்டீவன்ஸ் 7 ரன்களுக்கும், நெல் பூம் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய திசாரா பெரேரா 19 ரன்களையும், பில் முஸ்டர்ட் 21 ரன்களையும், ஷோஹைல் தன்விர் 16 ரன்களையும் என சேர்த்த நிலையிலும், இன்னிங்ஸ் முடிவில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூயார்க் தரப்பில் அப்துர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷொஹைல் கான், ஜொஹன் போதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் நியூயார்க் வாரியர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை அப்துல் ரஸாக் பெற்றுக்கொண்டார்.
Win Big, Make Your Cricket Tales Now