ஆஸ்திரேலிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் சமீபத்தில் ராஜிநாமா செய்தார். சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது.
2018இல் தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடினமான அச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 51 வயது லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Trending
சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தபோதும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது. இதை ஏற்றுக்கொள்ளாத லாங்கர், தனது பதவியை ராஜிநாமா செய்தார். தன்னுடைய ஒப்பந்தத்தை நீண்ட காலத்துக்கு நீட்டிக்க லாங்கர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. அதேபோல ஒரு டி20 ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் செயல்பட்டார்.
ஆஸி. அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்படுவது குறித்த தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now