
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போது இந்திய அணி தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் நிலவியத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக நீண்டகாலமாக நான்காவது இடத்திற்கு யார் விளையாடுவார்? என்கிற கருத்துக்கள் நிலவி வந்தபோது, சில வருடங்களாக அம்பத்தி ராயுடு அந்த இடத்தில் விளையாடி நம்பிக்கையை பெற்றிருந்தார். அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்றும் கருத்துக்கள் நிலவின.
55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார் ராயுடு. பெரும்பாலான போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடி நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். உலகக்கோப்பைக்கு முன்பாக 2018 முதல் மார்ச் 2019 வரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 650 ரன்கள் அடித்திருந்தார். அதில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
இப்படி சிறப்பான ஃபார்மில் இருந்த ராயுடுவை கடைசி நேரத்தில் உலகக்கோப்பையில் எடுக்காமல் கேஎல் ராகுலை நான்காவது இடத்திற்கு விளையாட வைத்தனர். மேலும் ராயுடு இடத்திற்கு விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். இது ராயுடு மற்றும் பிசிசிஐ இடையில் பனிப்போராக மாறியது. கடைசியில் ராயுடு ஓய்வு முடிவு அறிவித்தார். அடுத்த ஒரு வருடங்களில் அதை திரும்ப பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.