
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்வது குறித்த விவகாரம் சூடுபிடித்து வருகிறது. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடிவிட்டால், உடனடியாக அவரை இந்திய அணியில் எடுத்துவிடுவதா என குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது வீரர்கள் காயத்தினாலோ, ஃபார்ம் அவுட்டாகி இந்திய அணியை விட்டு வெளியேறினால், அதன்பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியின் தேர்வில் பங்கேற்க முடியும்.
இந்த திட்டத்தை முதலில் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். அவருக்கு பின்னர் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளரான போது அத்திட்டம் கைவிடப்பட்டது. பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகினர். இதன் விளைவாக தான் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சொதப்பியது என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தெரிவித்தனர்.