
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. இத்தொடரின் முதலாவது போட்டியானது ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தனர். இதனைத்தொடர்ந்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் சார்பாக இந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்கள் முழுவதுமாக பந்துவீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.