
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, மூன்றாவது பந்தில் திலக் வர்மா கிளீன் போல்டானார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த துல்லியமான யார்க்கரின் மிடில் ஸ்டம்பானது இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேராவும், முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அதுவும், திலக் வர்மாவிற்கு வீசப்பட்டது போன்ற துல்லியமான யார்க்கரில் இரண்டாவது முறையாகவும் ஸ்டம்ப் உடைந்தது. அர்ஷ்தீப் சிங்கின் இந்த அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சூழலில், நடுவரின் எந்த ஒரு சிறிய முடிவும் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயர்தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமே இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மைக் மற்றும் கேமரா வசதி அடங்கிய, எல்.ஈ.டி ஸ்டம்புகள் தான் பயன்படுத்தபடுகின்றன.