WI vs IND, 2nd T20I: அபார பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அர்ஷ்தீப் சிங்!
அழுத்தமான 17, 19 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய அர்ஷிதீப் சிங் திறமையை பார்த்து வியந்துபோகும் ரசிகர்கள் தலைவணங்கி பாராட்டுகிறார்கள்.
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் நகரில் வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதமானதால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய இப்போட்டி இரவு 11 மணிக்கு தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெஸ்ட் இண்டீசின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசு 19.2 ஓவரில் 141/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதும் மிடில் ஆர்டரில் எந்த பேட்ஸ்மேன்களும் 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இருப்பினும் 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற விடாமல் சிறப்பாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடினார்கள்.
குறிப்பாக 16ஆவது ஓவரில் 68 ரன்கள் எடுத்து மிரட்டிய பிரண்டன் கிங் ஆட்டமிழந்ததும் 17ஆவது ஓவரை வீசிய இளம் பவுலர் அர்ஷிதீப் சிங் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து துல்லியமாக பந்து வீசியதால் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது.
இருப்பினும் 18ஆவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸர் உட்பட 11 ரன்களை கொடுத்தார். ஆனால் 19ஆவது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் பந்து வீசிய அர்ஷிதீப் சிங் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்து காட்டடி இளம் வீரர் ரோவ்மன் போவலை 5 (8) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். ஆனால் அவரின் சிறப்பான பந்துவீச்சை வீணடிக்கும் வகையில் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது மோசமாக பந்துவீசிய ஆவேஷ் கான் 2 நோபால், 6, 4 என 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை கொடுத்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார்.
ஒருவேளை கடைசி ஓவரை 2 ஓவர்கள் மீதமிருந்து புவனேஸ்வர் குமார் வீசியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்பது ரோஹித் சர்மாவின் ஒரு சிறிய மோசமான கேப்டன்ஷிப்பை காட்டுகிறது. இருப்பினும் அழுத்தமான 17, 19 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய அர்ஷிதீப் சிங் திறமையை பார்த்து வியந்துபோகும் ரசிகர்கள் தலைவணங்கி பாராட்டுகிறார்கள்.
ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அட்டகாசமாக செயல்பட்டு இந்தியாவுக்காக கடந்த மாதம் இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமான அவர் நேற்றைய போட்டியுடன் சேர்த்து வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆனால் இந்த இளம் வயதிலேயே அனுபவமில்லாத போதிலும் லைன், லென்த், ஸ்லோ பந்துகள் போன்ற விவேகத்துடன் பந்துவீசும் இவர் ஜஹீர் கானுக்கு பின் நல்ல தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட தரமான இவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now