
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹாரி ப்ரூக் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 68 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 16 ரன்களிலும், ஸ்டூவர்ட் பிராட் 12 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்ம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.