ஆஷஸ் 2023: கடைசி வரை போராடிய இங்கிலாந்து; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது ஆஸ்திரேலியா!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார்.
கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
அதன்பின் 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 7 ரன்களுக்கும், பென் டக்கெட் 19 ரன்களிலும், ஒல்லி போப் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலா 46 ரன்களைச் சேர்த்திருந்த ரூட் மற்றும் ப்ரூக் இருவரும் நாதன் லையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டொக்ஸும் தனது பங்கிற்கு 43 ரன்களை எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 20, மொயீன் அலி 19, ஒல்லி ராபின்சன் 27, ஜேம்ஸ் ஆண்டர்சர் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரெலிய அணி தரப்பில் நாதன் லையன், பாட் கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் டேவிட் வார்னர் 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே தடுமாறி வந்த நிலையில் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மிதும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்ததது.
இதையடுத்து இன்று மழை காரணமாக 5ஆம் நாளின் முதலாவது செஷன் முழுவதுமாக கைவிடப்பட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தின் சிறுது நேரத்திலேயே ஸ்காட் போலண்ட் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 16 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 28 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து அணியை இழக்கை நோக்கி நகர்த்தினார். பின் 65 ரன்களைச் சேர்த்திருந்த கவாஜாவின் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் - நாதன் லையன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் இறுதிவரை அபாரமாக விளையாடிய இந்த கூட்டாணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த கம்மின்ஸ் 44 ரன்களையும், நாதன் லையன் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now