ஆஷஸ் 2023: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களைச் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 384 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி ப்ரூக் 14 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரி ப்ரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் ஹாரி ப்ரூக் 61 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Trending
இதனையடுத்து, களமிறங்கிய பேர்ஸ்டோவ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 81 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 275 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா 18 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 28 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் ஒரு ரன் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்னஸ் லபுசாக்னே 44 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now