
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், கிராலே மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
ஜோ ரூட் சதம் விளாசி களத்தில் இருந்த சூழலில், எதற்காக பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்து ரிஸ்க் எடுக்கிறார் என்று வர்ணனையாளர்களே அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் ஸ்விங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படவில்லை. இங்கிலாந்து அணிக்கு சாதகமான பிளாட் பிட்ச்களே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆஸி. அணி பதிலடி கொடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் முடிவு பற்றி அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நிச்சயமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு வர்ணனையாளர்கள் உட்பட ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக தான் இருந்திருக்கும். ஆனால் இங்கிலாந்து வீரர்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் கடந்த 13 போட்டிகளாகவே பென் ஸ்டோக்ஸ் முடிவுகளை பார்த்து வந்திருக்கிறோம். ஆஷஸ் தொடரில் பங்கேற்பது நிச்சயம் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். எனக்கும் அப்படியே” என்று தெரிவித்துள்ளார்.