
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அஷ்வானி குமார் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு அணியின் வெற்றியிலும் பெரும் பங்காற்றியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் அஷ்வானி குமார் ஐபிஎல் தொடரில் சிறப்பு சாதனை ஒன்றையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
அதன்படி, தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆறாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஷ்வானி குமார் பெற்றுள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் அல்சாரி ஜோசப், ஆண்ட்ரூ டை, சோயப் அக்தர், கெவோன் கூப்பர் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் மட்டுமே ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.