
நியூசிலாந்து அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நேற்று துபாய் மைதானத்தில் நியூசிலாந்து யுனைடெட் அரபு எமிரேடு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களில் எட்டி முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய அரபு அமீரக அணி பெற்று இருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணி யுஏஇ அணியிடம் தோற்று இருக்க வேண்டியது. ஆனால் வெற்றி பதட்டத்தில் ஆட்டத்தை முடிக்கும் அனுபவம் இல்லாத காரணத்தால் யுஏஇ பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து வெளியேறி விட்டார்கள். இந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் எடுத்துக் கொண்டால் டெஸ்ட் அந்தஸ்து பெறாத யுஏஇ அணியின் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பௌலிங் என மூன்று துறைகளின் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது.
அவர்களது திட்டங்கள் சரியாக இருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு சிறிய அணிப்போல் தெரியவே இல்லை. டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்தில் கூட ஆட்டம் மாறலாம் என்பதுதான் நிலைமை. ஆனாலும் சர்வதேச அளவில் பெரிய அணிகள் முன்பு சிறிய அணிகளை மிக எளிதாக வீழ்த்தி வந்திருந்தன. ஆனால் தற்காலத்தில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் எந்த ஒரு அணியையும் சிறிய அணியாக எடுத்துக் கொள்ளவே முடியாத நிலைமைதான் இருக்கிறது.