ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 590 ரன்களை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள வீரர்களிலேயே ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து விளாசக் கூடிய மிகச்சில வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட்-ம் ஒருவர். அந்த அளவிற்கு நளினமாக பேட்டிங் ஆடக் கூடியவர்.
அதுமட்டுமல்லாமல் எந்த அளவிற்கு ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவாரோ, அதே அளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் பொளந்து கட்டக் கூடிய வீரர். பும்ரா பந்துவீச்சையே சரியாக கணித்து சிக்சர்களை விளாசக் கூடிய அசாத்தியமான வீரர். சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Trending
இந்த நிலையில் ஆசியப் போட்டிகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் சரியா என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு டி20 தொடருக்கும் ஒரு கேப்டனை தேர்வு செய்வதாக பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா செயல்பட்டு வருகிறார். பின் ஆசியப் போட்டிகளுக்கு ருதுராஜும் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ருதுராஜ் கெய்க்வாட்டை பாராட்டி பேசி இருக்கிறார்.
அதில், “ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர். பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை சாதாரணமாக விளையாடுவதற்காக பிறந்தவர் போல் விளையாடுவார். வலைபயிற்சிக்கு பணம் கொடுத்து பார்க்க வேண்டுமென்றால், நான் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங்கிற்கு பணம் கொடுத்து பார்க்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now