
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3053 ரன்களையும், 537 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் தனது பெயரில் வைத்துள்ளார்.
மேற்கொண்டு 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சர்வதேச கிரிக்கேட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் கடந்த மாதம் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார். மேலும் எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் வேறு அணிக்கு செல்லவுள்ளார் என்ற தகவல்களும் வெளியான நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.