ஆசிய கோப்பை 2022: இப்ராஹிம், நஜிபுல்லா காட்டடி; சூப்பர் 4-ல் நுழைந்தது ஆஃப்கான்!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டரை ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கானும் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து சரித்தனர். ரஷீத் - முஜிபுர் ஜோடியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வங்கதேச வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 89 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.
Trending
பின்வரிசையில் மொசாடெக் ஹுசைன் அடித்து ஆடி 31 பந்தில் 48 ரன்கள் அடித்தார். மஹ்மதுல்லாவும் 25 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 127 ரன்களையாவது எட்டியது வங்கதேச அணி. ஆனால் இது மிக குறைவான ஸ்கோரே ஆகும். 128 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணி விரட்டிவருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஹஸ்ரதுல்லா ஸஸாய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் குர்பாஸ் 11 ரன்களிலும், அடுத்து வந்த முகமது நபி 8 ரன்களிலும், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - நஜிபுல்லா ஸத்ரான் இணை சிக்சர் மழை பொழிந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இப்ராஹிம் ஸதரான் 42 ரன்களிலும், நஜிபுல்லா ஸத்ரான் 17 பந்துகளில் 6 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தேர்வாகி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now