ஆசிய கோப்பை 2022: இலங்கையை 105 ரன்களில் சுருட்டிய ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
15ஆவது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யதது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் 5ஆவது பந்திலேயே குசால் மெண்டிஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Trending
அவரைத் தொடர்ந்து பதும் நிஷங்கா 3 ரன்களிலும், சரித் அசலங்கா ரன் ஏதுமின்றியும், தனுஷ்கா குணத்திலகா 17 ரன்கள் என அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
பின்னர் ஒரு முனையில் பானுகா ராஜபக்க்ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, கேப்டன் தசுன் ஷனாகா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுகா ராஜபக்க்ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 38 ரன்களோடு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் சமிகா கருணரத்னே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் 19.4 ஓவர்களில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுகளையும், முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now