
கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை நடைபெறவுள்ளதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டிற்கான ஆசியக் கோப்பை தொடர் முதலில் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இத்தொடர் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக ஆசியக் கோப்பையும் பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து ஆசிய அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறக்க முடிவு செய்துள்ளது. இந்திய அணியும் ஆசியக் கோப்பையில் இருந்து டி20 உலகக் கோப்பை வரை அணியை மாற்றாமல் விளையாட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டதால், ஆசியக் கோப்பைக்கான அணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.