மழை அபாயம்; இந்தியா - இலங்கை போட்டி நடைபெறுமா?
இன்றைய நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.
Trending
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர் கொள்கிறது. இந்திய வீரர்கள் ஓய்வின்றி தொடர்ந்து விளையாட உள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 2 நாட்கள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று கொழும்பு மைதானத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
இதையடுத்து கொழும்புவில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் மதியம் 1 மணி அளவில் 49 சதவீதம் மழை பெய்யவும், 2 மற்றும் 3 மணி அளவில் 60 சதவீதமும், 4 மணி அளவில் 40 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 34 சதவீதமும் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணி அளவில் 37 சதவீதமும், இரவு 7 மணி அளவில் 43 சதவீதமும், 8 மணி அளவில் 47 சதவீதமும், 9 மணி அளவில் 51 சதவீதமும், இரவு 10 மணி அளவில் 35 சதவீதமும், 11 மணி அளவில் 29 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now