
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தவாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுப்மன் கில் 5 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த கையோடு அபிஷேக் சர்மா நடையைக் கட்ட, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் 26 ரன்களுக்கும், ஷிவம் தூபே 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த திலக் வர்மா 29 ரன்களுக்கும், அர்ஷ்தீப் சிங் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹர்ஷித் ரானா சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார்.