
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2ஆவது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருந்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். இருப்பினும் ஹாங்காங் அணியின் பந்து வீச்சு எந்த வகையில் இருக்கும் என்பது புதிராகவே உள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படக்கூடும். அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.