
ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்க முடியாது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலடியாக எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்தது. அப்போதிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விவகாரம் இருநாட்டுக்குமிடையே அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் பாகிஸ்தானிடம் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை கொடுத்ததால் வேறு வழியின்றி அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.
அதே போல் என்ன ஆனாலும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி உட்பட எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இந்த ஆசியக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடராக நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.