
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு நமன் ஓஜா - ராகுல் யாதவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராகுல் யாதவ் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் நமன் ஓஜாவும் 10 ரன்களுடனும் நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஃபைஸ் ஃபசல் - யோகேஷ் நகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் யோகேஷ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபைஸ் ஃபசல் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் மன்ப்ரீத் கோனி 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்தியன் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் விகும் சஞ்சயா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.