AUS vs WI, 2nd Test: நான்காண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் உப்புதாளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் அப்போது அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. மற்றொரு வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாத காலம் தடை விதித்தது.
அந்த சம்பவத்தை அடுத்து ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக செயல்பட வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
Trending
இதனிடையே, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அந்த அணியுடன் 2 டி20, 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக பேட் கம்ம்னிஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்சுக்கு முட்டு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவதிப்பட்டு வந்த கம்மின்ஸ் நாளை நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்மின்ஸ் விலகியதையடுத்து வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கபட்டுள்ளார். 2018 விவகாரத்தில் 2 ஆண்டு கேப்டனாக பதவி வகிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகள் கழித்து அந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்க எந்த தடையும் இல்லாததால் அவரை அடுத்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பின் ஸ்மித் நாளை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் அணிக்கும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now