
டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கான்பெராவில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் சாம் கரன், கிறிஸ் ஜோர்டானுக்கு ஓய்வளிக்கப்பட்டு முறையே கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, பட்லரும் டேவிட் மலானும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருக்க, 7ஆவது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 10வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.